சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்ழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது சென்னையலிருந்து 550 கிலோமீட்டர் தொலைவிலும், நாகையிலிருந்து 570 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது ஒரு ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக உருமாறி, 16ம் தேதி மாலையில், நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றழுத்த மண்டலம், தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக கடலில் 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் தற்போது கடலுக்குள் போகவில்லை என்று தெரிகிறது.
சென்னை, நாகப்பட்டினம், கடலூர் துறைமுகங்களில் புதுச்சேரி, எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களிலும் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நாளை மாலை முதல் சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம் கரையைக் கடக்கும் சமயத்தில், வடக்குக் கடலோரத் தமிழகத்திலும், புதுச்சேரியிலும், சேதம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது