தமிழக மலைகளில் டிரெக்கிங் செய்வது என்பது ஒரு அற்புதமான அனுபவம். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் பெரும்பாலும் கோயில் குளங்களுக்கு செல்வது போல டிரெக்கிங் செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனினும் இந்த நிலைமை சமீப காலங்களாக மாறி வருகிறது.
தற்போது நிறைய பேர் டிரெக்கிங், ஹைக்கிங் (நெடுந்தூர பயணம்), ரேப்பலிங் (கயிறு கட்டி மலையிறங்குதல்) போன்ற சாகசங்களில் ஈடுபட விரும்புகிறார்கள்.
எனவே அவர்களை போன்ற பயணிகளையும், டிரெக்கிங் பிரியர்களையும் குஷிப்படுத்த தமிழ்நாட்டில் எண்ணற்ற மலையேற்ற ஸ்தலங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அவற்றில் மிகவும் பிரபலமான சில மலையேற்றப் பாதைகளை தற்போது பார்ப்போம்.
கொடைக்கானல் - டால்ஃபின் மூக்கு - வல்லகவி - கும்பக்கரை
கொடைக்கானலிலிருந்து கும்பக்கரை வரை மொத்தம் 8 கி.மீ நீளத்துக்கு இந்த மலையேற்றப் பாதை நீண்டு செல்கிறது. இந்தப் பாதையில் மலையேற்றம் செய்வதற்கு குறைந்தது 6 மணி நேரமாவது ஆகும். இப்பாதையில் திடீர் திடீரென செங்குத்து பாறைகள் தென்படுவதொடு திடீரென மலை கீழிறங்கியும் செல்லும். எனவே இந்தப் பாதையில் மலையேற்றத்தில் ஈடுபடுவது சற்று கடினமான காரியம். இதற்கு மலையேற்றத்தில் ஈடுபடுபவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியம்.
ஊட்டி - அவலஞ்சி - எமெரால்ட்
ஊட்டிக்கு தென்மேற்காக அமைந்துள்ள அவலஞ்சி அணை வழியாக மலையேற்றம் மேற்கொள்வது சுலபமானது என்பதுடன் தூரத்தில் தெரியும் முக்கூர்த்தி தேசிய பூங்கா, பனிச்சரிவு ஏரி மற்றும் அடர்ந்த காடுகள் ஆகியவை கண்களுக்கு விருந்து படைக்கும். மேலும் இப்பகுதியில் இரவில் தங்குவதற்கு வனத்துறை விருந்தினர் இல்லங்களை ஏற்பாடு செய்துகொடுக்கிறது. எனவே இரவு ஓய்வெடுத்துக்கொண்டு அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் பயணத்தை துவங்கலாம். பின்பு காலையில் புகழ்பெற்ற பிக்னிக் ஸ்தலமான மேல் பவானி அணையிலிருந்து மலையேற்றத்தை தொடங்குவது சிறப்பானதாக இருக்கும். இந்த அணையின் வடக்கே ஊட்டியின் உயரமான சிகரங்களில் ஒன்றான கொல்லரிபெட்டா அமைத்துள்ளது.
இங்கிருந்து ஊட்டிக்கு திரும்பும் வழியில் அமைந்துள்ள எமெரால்ட் எனும் அழகிய கிராமத்தை நீங்கள் தவற விட்டுவிடக்கூடாது. நீலகிரி மலைகளில் வருடத்தின் எந்த காலத்திலும் மலையேற்றம் மேற்கொள்ளலாம் என்றாலும் பனிக்காலங்களில் மலையேற்றத்தில் ஈடுபடுவது அற்புதமான அனுபவத்தை கொடுக்கும். எனினும் மலையேற்றத்தில் ஈடுபடும் முன் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அவசியம். அப்படி உங்களுக்கு பயண வழிகாட்டி யாரேனும் தேவைப்பட்டால் அதை வனத்துறை மூலம் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் தங்குவதற்கு விருந்துனர் இல்லங்களும் கிடைக்கும். எனவே இப்போதே சிலிர்ப்பூட்டும் நீலகிரி மலையேற்றத்துக்கு தயாராகுங்கள்!
குன்னூர் - லேம்ப் பாறை - லேடி கேன்னிங் சீட் - டால்பின் மூக்கு - துரூக் கோட்டை - குன்னூர்
லேம்ப் பாறை மற்றும் லேடி கேன்னிங் சீட் வரை அப்படியே ஒரு இயற்கை நடைபயணம் மேற்கொண்டால் மலைகள் வடித்திருக்கும் இயற்கை அழகினையும், பசுமை பள்ளத்தாக்குகளையும் பரிபூரணமாக பார்த்து களிக்கலாம். அதோடு லேடி கேன்னிங் சீட் உங்களை டால்பின் மூக்கு காட்சி மேடைக்கு கூட்டிச்செல்லும். நீலகிரியின் பல முக்கிய இடங்களை இங்கிருந்து காணலாம். கோத்தகிரியின் கேத்தரின் அருவியும் அதில் ஒன்று. ஆனால் மலை உச்சியில் இருக்கும் போது கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். மேலும் குன்னூர் செல்லும் வழியில் லாஸ் அருவி மற்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக திப்பு சுல்தான் வீரப்போர் புரிந்த துரூக் கோட்டை ஆகியவற்றை காண முடியும்.
கொடைக்கானல் - தொப்பித் தூக்கிப் பாறை - பெரியூர் - பெரியகுளம்
கொடைக்கானலிலிருந்து பெரியகுளம் வரையிலான இந்த மலையேற்ற பாதை 19 கி.மீ நீளத்துக்கு நீண்டு செல்கிறது. இந்தப் பாதையில் மலையேற்றம் செய்வதற்கு குறைந்தது 5 முதல் 6 மணி நேரமாவது பிடிக்கும். அதோடு இந்த மலையேற்ற பாதையை கடப்பதென்பது மிகவும் எளிதான காரியம். மேலும் சாகச மலையேற்றத்துடன் இந்தப் பாதையில் உங்களை மகிழ்விக்க நறுமணம் கமழ காப்பித் தோட்டங்களும் காத்துக்கொண்டிருக்கின்றன.
ஊட்டி - பார்சன் சிகரம் - முக்கூர்த்தி தேசிய பூங்கா - பைக்காரா அருவி - முதுமலை தேசிய பூங்கா - ஊட்டி
ஊட்டியின் வடமேற்காக மலையேற்றம் செய்வது பார்சன் பள்ளத்தாக்கின் வசீகரிக்கும் அற்புத தோற்றத்தை நம் கண் முன்னே படம்பிடித்து காட்டும். இந்த சாகச பாதை நம்மை போர்த்திமுண்ட் எனும் நீலகிரியின் அடி ஆழத்தில் இருக்கும் அழகிய சிறு கிராமத்திற்கு அழைத்துச் செல்லும். அங்கு ஒரு இரவு தங்கிப் பாருங்கள் அதன் பருவநிலை தரும் குளிர் ஸ்பரிசம் உங்களுக்கு உங்கள் காதலருடன் இருப்பது போன்ற உணர்வை கொடுக்கும். அதோடு போர்த்திமுண்ட் கிராமத்திற்கு அருகே உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் சிறுத்தை, யானை, ஆபத்தான தாஹ்ர் ஆடு போன்ற விலங்குகளை கண்டு ரசிக்கலாம். அதற்கு அடுத்த நாள் பாண்டியர் குன்றுகளிலிருந்து மலையேற்றத்தை துவங்கினால் பைக்காரா அருவி, முதுமலை தேசிய பூங்கா வழியாக உங்களை மீண்டும் ஊட்டிக்கு அழைத்து வந்து விடும். அப்போது வரும் வழியில் முதுமலை தேசிய பூங்காவில் காணப்படும் எக்கச்சக்கமான சந்தன மரங்கள், தேக்கு மரங்கள், மூங்கில்கள் எல்லாம் நம்முடனேயே பயணிப்பது போல் பயணத்தை இனிமையானதாக ஆக்கும்.
ஏலகிரி மலையேற்றம்
இங்கு அடர்ந்த காடுகள் வழியே அழகான இடங்களுக்கும், நீர்வீழ்ச்சிகளுக்கும், சிகரங்களுக்கும், பள்ளத்தாக்கை கண்டு ரசிக்கும் இடங்களுக்கும் அழைத்துச் செல்லும் 7 பாதைகள் உள்ளன. இவற்றில் நீளமான பாதை புங்கனூர் ஏரியிலிருந்து நிலாவூர் ஜலகம்பாறை செல்லும் 14 கி.மீ. தூரமுள்ள பாதையாகும். அதேபோல புங்கனூர் ஏரியிலிருந்து சுவாமி மலைக்கு செல்லும் மற்றொரு அழகான 6 கி.மீ. தூரமுள்ள பாதையும் இங்கு உள்ளது. இது பலராலும் விரும்பப்படுவதோடு இந்தப் பாதை அழைத்துச் செல்லும் குன்றிலிருந்து மலையின் மொத்தத் தோற்றமும் காணக்கிடைக்கிறது.
கோத்தகிரி - கொடநாடு வியூ பாயின்ட் - கேத்தரின் அருவி - எல்க் அருவி
கோத்தா இனமக்கள் அதிகமாக வாழும் கோத்தகிரி பகுதி நீலகிரி மலைகளின் மையத்தில் அமைந்திருக்கிறது. எனவே கோத்தகிரியிலிருந்து கிழக்கு பக்கமாக கொடநாடு வியூ பாயின்ட் மார்க்கமாக மலையேற்றத்தில் ஈடுபடுவது அட்டகாசமான ஆரம்பமாக இருக்கும். ஏனெனில் பள்ளத்தாக்கின் அழகை முழுமையாக கண்டு ரசிக்க முடிவதுடன், மொய்யாறு நதியின் அரவணைப்பில் மிடுக்குடன் காட்சியளிக்கும் தேயிலை தோட்டங்கள் கண்களுக்கு விருந்தாக அமையும். இதுபோக கொடநாடு வியூ பாயின்ட்டுக்கு தென்மேற்காக நடந்து சென்றால் கேத்தரின் அருவி மற்றும் எல்க் அருவியின் பரவசமூட்டும் காட்சியை கண்டு களிக்கலாம்.
மங்கீ ஃபால்ஸ் மலையேற்றம்
மங்கீ ஃபால்ஸ் ஆனைமலை பகுதியில் கோயம்புத்தூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது . இயற்கையாக அமைந்த அருவியான மங்கீ ஃபால்ஸில் பசுமையான காடுகள் மற்றும் கரடு முரடான பாறைகளை கொண்ட அருமையான மலையேற்ற பாதை ஒன்று உள்ளது. எனவே மலையேற்ற பிரியர்கள் திட்டமிட்டு நண்பர்கள் சகிதமாக இங்கு வந்தால் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். 5 கி.மீ தூரம் கொண்ட இந்தப் பாதையை கடக்க குறைந்தது 3 மணி நேரம் ஆகும்.
No comments:
Post a Comment