Showing posts with label Metro Train. Show all posts
Showing posts with label Metro Train. Show all posts

Wednesday, 13 November 2013

சென்னையின் முகத்தையே மாற்றப்போகும் மெட்ரோ ரயிலில் இருக்கும் வசதிகள் என்ன?


சென்னை மெட்ரோ ரயில் கனவு விரைவில் நனவாகப் போகிறது. ரயில் பெட்டிகள் சோதனை ஓட்டத்துக்கு தயாராகிவிட்டன; கோயம்பேடு முதல் ஏர்போர்ட் வரையான ரயில் பாதையும் கிட்டத்தட்ட தயார். சென்னையின் முகத்தையே மாற்றப் போகிறது மெட்ரோ. மெட்ரோ ரயிலில் அப்படி என்னென்ன வசதிகள் இருக்கும்?
 
மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்திலும் நகரும் படிக்கட்டுகள் உண்டு. மின் தூக்கிகள் உண்டு. சுரங்க ரயில் நிலையங்கள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும்.ரயில் பெட்டிகள் அனைத்தும் எவர்சில்வரால் செய்யப்பட்டவை. எனவே துருப்பிடிக்காதவை. எல்லாப் பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்டவை. எந்த ஸ்டேஷன் மாஸ்டரும் வண்ணக் கொடிகளையும், விசிலையும் வைத்துக் கொண்டு வேலை செய்யமாட்டார். ரயில் பெட்டிகளுக்குத் தானியங்கிக் கதவுகள். அடுத்தது எந்த ரயில் நிலையம் நெருங்குகிறது என்பதை ரயில் பெட்டிக்குள்ளேயே உள்ள மின்னணுத் திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் வசதியும் உண்டு. சக்கர நாற்காலிகளை நிறுத்தி வைக்க ரயில் பெட்டிகளில் தனி இடம் உண்டு.ஒரு பெட்டியிலிருந்து இன்னொரு பெட்டிக்கு எளிதாகச் செல்லமுடியும். இதனால் ஒரு பெட்டியில் கூட்ட நெரிசல், ஒரு பெட்டியில் மிகக் குறைவான பயணிகள் என்ற நிலை தவிர்க்கப்படும். எல்லாவற்றையும்விட இனிப்பான செய்தி காலையும், மாலையும் (Peak Hours) மூன்று நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்பதுதான். நான்கு பெட்டிகளைக் கொண்ட ஒரு மெட்ரோ ரயில் தொடரில் சுமார் 1275 பேர் பயணம் செய்யலாம். பிற்காலத்தில் ஆறு பெட்டிகள் கொண்ட தொடராக இது மாற்றப்படுமாம். முதல் கட்டத்தில் 45 கி.மீ. நீளமுள்ள இரண்டு மெட்ரோ ரயில் வழித் தடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 
 
முதல் வழித்தடம் வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை கொண்டது. ரயில் பாதையின் மொத்த நீளம் 23 கிலோமீட்டர். இதில் மொத்தம் 16 ரயில் நிலையங்கள். இவற்றில் 10 சுரங்கப் பாதையில் உள்ளவை.  இரண்டாவது வழித்தடம் சென்ட்ரலிலிருந்து செயின்ட் தாமஸ் மௌன்ட் வரை கொண்டது. ரயில் பாதையின் மொத்த நீளம் 22 கிலோமீட்டர். இதிலும் மொத்தம் 16 ரயில் நிலையங்கள். இவற்றில் ஒன்பது சுரங்கப் பாதையில் அமைக்கப்படுகின்றன. மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து கூட்டு முயற்சியாகச் செயல்படும் இந்தத் திட்டத்துக்கான அடிப் படைச் செலவுத் தொகை ரூபாய் 14,600 கோடி. இந்த முதலீட்டில் 60 சதவிகிதம் கடனாகப் பெறப்படுகிறது. இந்தக் கடனை மெட்ரோ ரயில் நிறுவனம் திருப்பிச் செலுத்த வேண்டும். மீதமுள்ள முதலீட்டில் 20 சதவிகிதம் மத்திய அரசும், 20 சதவிகிதம் தமிழக அரசும் அளிக்கின்றன.