Showing posts with label இந்தியாவின் 7 அதிசயங்கள். Show all posts
Showing posts with label இந்தியாவின் 7 அதிசயங்கள். Show all posts

Friday, 15 November 2013

இந்தியாவின் 7 அதிசயங்கள்!

உலகின் 7 அதிசயங்களாக பைசா சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிசின் ஈஃபிள் டவர், சீனப்பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசீயும், அமெரிக்காவின் எம்பெயர் ஸ்டேட் கட்டிடம் ஆகியவை அறியப்படுகின்றன. இவையெல்லாவற்றையும்விட உலகின் 8-வது அதிசயமாக உலக அழகி ஐஸ்வர்யாராயை நாம் எல்லோருக்கும் தெரியும்!!! அதேவேளையில் இந்தியாவின் 7 அதிசயங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்வதில் சாதாரணமாக எலோருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும். எவையெல்லாம் இந்தியாவின் 7 அதிசயங்களாக பார்க்கப்படுகின்றன, அப்படி பார்க்கப்படும்படி என்ன அதிசயம் அவற்றில் காணப்படுகின்றன என்று பார்ப்போம்.
.
1. சிரபுஞ்சி வேர்ப்பாலம்



மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் காணப்படும் இந்த வேர்ப்பாலம் ரப்பர் மரத்தின் வேர்களால் உருவானது. மேகாலயாவின் பழங்குடியினரான 'வார்-காசிஸ்' மக்கள்தான் முதன் முதலில் இந்த வேர்ப்பாலத்தின் மூலம் ஆற்றை கடக்க ஆரம்பித்தனர். இதன் பின்னர் இப்பகுதி மக்கள் ரப்பர் மரங்களில் செயற்கையாக வேர்ப்பாலங்களை உருவாக்க தொடங்கினர். அதாவது பாக்கு மரத்தின் தடித்த பாகத்தை துளையிட்டு அதில் ரப்பர் மர வேர்களை நுழையச்செய்து அது அப்பக்கம் வளர்ந்து சென்ற பிறகு மண்ணுக்குள் செல்கிறது. இதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு பயணிக்க தகுதியான, உறுதியான வேர்ப்பாலமாக இது மாறிவிடும்.


2. மாமல்லபுரம் சமநிலை பாறை


மாமல்லபுரத்தில் காணப்படும் இந்த சமநிலை பாறை 'கிருஷ்ணாவின் வெண்ணைப்பந்து' என்று அழைக்கப்படுகிறது. பைசாவின் சாய்ந்த கோபுரம் போலவே எப்படா விழப்போகுது என்பது போன்றே தோற்றமளித்து கொண்டிருக்கிறது இந்தப் பாறை. இதே போன்ற பாறைகள் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரிலும், கன்ஹா தேசிய பூங்காவிலும் காணப்படுகின்றன.

3. லொனார் விண்கல் பள்ளம்


லொனாரின் விண்கல் பள்ளம் தான் உலகிலேயே தீக்கல் பாறை வகைகளில் அமைந்த ஒரே உப்பு நீர் ஏரி ஆகும். அதோடு இந்த விண்கல் பள்ளம் 52,000 அண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டது என்பது இதன் கூடுதல் சிறப்பு. இங்கு மயில், வாத்து, ஆந்தை, சிவப்பு மூக்கு ஆள்காட்டி போன்ற பறவைகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம். அதுமட்டுமல்லாமல் லொனார் ஏரியே கவின் கொஞ்சும் காட்சிக்கு சொந்தமானது. நமது பிரபஞ்சத்தில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் குறித்து அறிய விரும்புபவர்களும், புவியியல் மற்றும் அறிவியல் மீது நாட்டம் கொண்ட பயணிகளும் வாழ்கையில் ஒருமுறையாவது கண்டிப்பாக லொனார் ஏரிக்கு வர வேண்டும்.

4. மேக்னடிக் ஹில்


உங்க காரோ அல்லது பைக்கோ இந்த மேக்னடிக் ஹில்லில் பெட்ரோல் இல்லாமல் நின்றுபோய்விட்டால் கவலையே வேண்டாம். ஏனென்றால் இந்த மலையில் உள்ள காந்தப் பண்புகளின் காரணமாக வாகனங்களை மலையின் மேலே இழுக்குமாம். எனவே மேக்னடிக் ஹில் வந்தவுடன் நீங்கள் உங்கள் வாகனங்களின் இன்ஜின்களை நிறுத்துவிட்டு பெட்ரோல் இல்லாமலே பயணிக்கலாம். இந்த மேக்னடிக் ஹில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் மாவட்ட தலைநகர் லே அருகே அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மேக்னடிக் ஹில் கார் பயணம் செய்பவர்களிடம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

5. போரா குகைகள்


போரா குஹாலு என்று உள்ளூர் மொழியில் அழைக்கப்படும் போரா குகைகள் அனந்தகிரி குன்றின் ஒரு பகுதியாக இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அமைந்திருக்கிறது. இந்த குகைகள் கடல் மட்டத்திலிருந்து 2313 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு, இந்தியாவின் மிகப்பெரிய குகைகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. பெரும்பாலும் சுண்ணாம்புக் கற்களாலேயே உருவாகியிருக்கும் போரா குகைகள் 80 மீட்டர் ஆழம் கொண்டதால், இந்தியாவின் ஆழம் மிகுந்த குகையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக போரா குகைகள் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியல் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

6. மணிகரன் வெந்நீர் ஊற்றுகள்



மணிகரன் நகரில் உள்ள மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சமாக திகழும் இந்த வெந்நீர் ஊற்றுகளில் ஒன்று ஸ்ரீ குரு நானக் தேவ்ஜி குருத்வாராவிலும் மற்றொன்று பார்வதி ஆற்றுப்பகுதியிலும் அமைந்துள்ளது. பார்வதி ஆற்றின் கரையிலுள்ள வெந்நீர் ஊற்று சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த ஊற்று நீரில் பல கதிரியக்க கனிமங்களும் இயற்கையான யுரேனியத் தாதும் கலந்திருப்பது பல ஆராய்ச்சிகளுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

7. அமர்நாத் பனிலிங்கம்



ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தென்பகுதியில் இமயமலையின் மீது 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் அமர்நாத் குகை அமைத்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலங்களில் பனிலிங்கத்தை தரிசிக்கலாம். அதாவது இயற்கையாக உருவாகும் பனிலிங்கமாக கருத்தப்படும் இது ஜூன் மாதம் உருவாகி ஆகஸ்ட் மாதத்தில் கரைந்துவிடும். இதனை தரிசிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் குகைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.